மலையகத்தில் சீரற்ற காலநிலை ; வீடுகளுக்குள் வெள்ள நீர் – அவதியுறும் மக்கள்

172 0

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில் தொடர்குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பாடசாலை, கொழுந்து மடுவம் ஆகியனவற்றிக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளன.

இதேவேளை கொட்டகலை ஆறு பெருக்கெடுத்தன் காரணமாக லொக்கீல் பகுதியில் உள்ள 30 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளன. அத்தோடு கொட்டகலை வூட்டன் பகுதியில் 10 கடைகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளன.

வட்டவளை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பல குடும்பங்கள் வட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

மழையுடன் கடும் குளிரும் நிலவுவதனால் பல்வேறு தொழில் துறைகள் முடங்கி போய்யுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு கனத்த மழை பெய்து வருவதனால் லக்ஸபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 06 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் அதிகமான தொழிலாளர்கள் கொழுந்து பறிப்பதற்கு சமூகம் தரவில்லை என்றும் இதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.

காலை முதல் இடை விடாது மழை பெய்து வருவதனால் கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புற்களை அறுக்க முடியாது சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மழை காரணமாக மலையக நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகளும் சோகையிழந்து காணப்படுகின்றன.