இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதையுண்டுள்ள ஈழத்தமிழர் தலைவிதி-மு.திருநாவுக்கரசு!

368 0

worldmap1-640x381இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றிஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம்.

21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் தமிழரின் இரத்தத்தால் சிவந்து அது வல்லரசுகளுக்கு உரம்பாய்ச்சும் ஒன்றாய் காணப்படுகிறது.

கோடிக்கணக்கான ஆண்டுகாலங்களாக கடற்பிராணிகளின் சமுத்திரமாக விளங்கும் இந்துசமுத்திரம் கிபி 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப்பேரரசின் எழுச்சியோடு அரசியல் சமுத்திரமாக மாறியது.

சோழப்பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அராபியரின் கை இந்து சமுத்திரத்தில் ஓங்கியதுடன் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனப் பேரரசும் இந்துசமுத்திரத்தில் தன் கால்களை பதிக்க முற்பட்டது.

ஆனால் 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பியரின் காலடிக்குள் இந்துசமுத்திரம் வீழ்ந்ததிலிருந்து இற்றைவரை ஆறு நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் மேற்கு உலகத்தோரின் பிடியில் அது உள்ளது.

ஆனால் குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவோடு கைகோர்த்து நின்றதன் மூலம் இலங்கைத் தீவிற்கூடாக இந்துசமுத்திரத்தில் தனது நகங்களையும், பற்களையும் பதிக்கத் தொடங்கியிருக்கும் சீன டிரேகன் மேற்குல வல்லரசுகளுக்கும் இந்துசமுத்தித்தில் உள்ள பேரரசான இந்தியாவிற்கும் சவாலாய் எழுந்து தன்னை இங்கு நிலைநிறுத்த முயல்கிறது.

சீனாவின் தேசியத் தலைவராக கருத்து வேறுபாடுகளைக் கடந்து போற்றப்படும் டொக்டர் சன்யாட்சென் 1920களின் மத்தியில் சீனா பற்றி கூறிய தீர்க்கதரிசனம் மிக்க மதிப்பீடு பெரிதும் கவனத்திற்குரியது.

சீனா தன் பலமான சனத்தொகையினாலும், அதன் பிரதேச பருமனாலும் அதனிடம் காணப்படும் அறிவியல் மற்றும் பாரம்பரிய பலங்களினாலும் எதிர்காலத்தில் இன்றைய மேற்குலக வல்லரசுகளையெல்லாம் விஞ்சி உலகின் மாபெரும் பேரரசாக விளங்கும்.

அப்படி விளங்கும் சீனா வலியோரின் பிடியில் இருந்து மெலியோரைக் காக்கும் பேரரசாகவும் அது திகழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது தீர்க்கதரிசனத்தின் முற்பகுதி ஒரு நூற்றாண்டின் பின்பு நிதர்சனமாகும் நிலையை எட்டியுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்காலில் அது மெலியோரான ஈழத்தமிழரின் பேரழிவுடன் தன் கரங்களையும் இணைத்துக் கொண்டுள்ளமையால் டொக்டர் சன்யாட்சென் கூறிய இரண்டாவது பகுதி பொய்த்துப் போய்விட்டது.

சீனா மாபெரும் உலகப் பேரரசாக வரும் என்ற சன்யாட்சென்னின் ஒரு நூற்றாண்டுக்கு முன்னான மதிப்பீட்டை மேற்குலக ஆட்சியாளர்களும் செய்திருக்க தவறியிருக்க மாட்டார்கள்.

சீனாவின் வரலாறு, அதனுடைய நிலப்பரப்பு, அதனுடைய ஒத்த ஓரினத்தன்மை, மற்றும் நீண்ட பண்பாடு மற்றும் பாரம்பரியங்களின் அடிப்படையில் சீனா ஒரு மாபெரும் வல்லரசாக எழும் என்பது யாராலும் கணிப்பிடப்பட்டிருக்கக்கூடிய ஒன்றே.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மக்கின்டர் (Mackinder: Heartland Theory) ) கண்டறிந்த இருதய நிலக்கோட்பாடுதான் இன்றைய உலக பேரரசுகளின் ஆதிக்கப் போட்டிகளுக்கான புவிசார் அரசியல் அடிப்படையாகும்.

மக்கின்டரது கோட்பாடு உருவாகுவதற்கு சுமாராக ஒரு நூற்றாண்டுக்கு முன் ரஷ்யா மீதான நெப்போலியனது படையெடுப்பும், நெப்போலிய யுத்தங்களுமே மேற்படி மக்கின்டரின் இருதய நிலக்கோட்பாடு உருவாகுவதற்கான நடைமுறை சார்ந்த வரலாற்று அடிப்படையாகும்.

மக்கின்டரது இருதய நிலக்கோட்பாட்டின்படி அதன் மையத்திலிருந்து இரண்டாவது வட்ட விளிம்பு நிலத்திற்குள் இந்தியா அடங்குகிறது. இந்துசமுத்திரத்தில் உள்ள பெரிய தலையாய நாடான இந்தியாவை கட்டியாள்வதன் மூலமே இந்துசமுத்திரத்தின் நலன்களை அடையமுடியும் என்ற அடிப்படையில் மேற்குலம் இந்தியாவை அணுகியது.

காலனிய ஆதிக்க யுகம் முடிந்ததும் சீனா தலையெடுக்கும் என்பதையும் அவ்வாறு தலையெடுக்கும் சீனா இந்துசமுத்திரத்துள் நுழையும் என்பதையும் சீனாவின் வரலாற்றுப் பாத்திரத்திற்கு ஊடாக ஐரோப்பியர்கள் புரிந்து வைத்திருக்கத் தவறவில்லை.

இதனால் காலனிய ஆதிக்கத்தின் பின் இந்துசமுத்திரத்தில் தலையெடுக்கவல்ல சீனாவைக் கட்டுப்படுத்த இந்துசமுத்திரத்தில் ஒரு பலமான அரசாக போட்டிக்கு நிறுத்தவல்ல இந்தியா அவசியம் என்பதை மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே விளங்கியிருந்தனர்.

அதேவேளை மேற்குலகிற்கு தலையிடி இல்லாத அளவிற்கு இந்தியாவைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இதனுடன் கூடவே மேற்குலகிற்கு இருந்தது.

ஆதலால் இந்தியாவின் பிரமாண்டமான அதன் உபகண்ட நிலப்பரப்பிலிருந்து பாகிஸ்தான் மற்றும் இன்றைய பங்களாதேஸ் பகுதியையும், பர்மாவையும் பிரித்தானியர் பிரித்தனர்.

முதலில் தமது யுத்த நோக்கு நிலையில் அவசியப்பட்ட பெற்றோலிய வளம் கொண்ட பர்மாவை 1935ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரித்தனர். பின்பு 1947ஆம் ஆண்டு பங்களாதேஸ் உள்ளிட்ட பாகிஸ்தானை பிரித்தனர். பர்மாவை பௌத்த மதத்தின் அடிப்படையிலும், பாகிஸ்தானை இஸ்லாமிய மதத்தின் அடிப்படையிலும் பிரித்தனர்.

ஏறக்குறைய பெருமளவு இந்துக்களைக் கொண்ட இந்தியாவை விட்டுவைப்பது அவர்களுக்கு பலக் கொள்கையின் அடிப்படையில் அவசியப்பட்டது.

இதன்பின்பு கஸ்மீர் பற்றிய பிரச்சனையில் மேற்குலகம் அவ்வப்போது தன் நலன்களுக்கு ஏற்ப தளம்பலான முடிவுகளை எடுத்தாலும் இந்தியாவில் இருந்து தென் பகுதி பிரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

அதாவது தென்னிந்தியாவில் திராவிட நாட்டுக் கோரிக்கை எழுந்தபோது மேற்குலகம் அதனை பிரிந்து போகும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவிற்கு ஆதரிக்க தயாரில்லை. திராவிட நாட்டுக் கோரிக்கையால் ஏற்படக்கூடிய உள்நாட்டு குழப்பநிலையின் பின்னணியில் இந்திய அரசை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு அதனை ஆதரித்தார்களே தவிர பிரிந்து செல்லும் அளவிற்கு அதனை ஆதரிக்கக் கூடாது என்பது மேற்குலகின் உறுதியான முடிவாகும்.

மேற்குலகில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஏற்ற பச்சைக்கொடி திராவிட நாட்டுக் கோரிக்கைக்கு கிடைக்காத பின்னணியில் திராவிட நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.

இதுவிடயத்தில் மேற்குலகம் இந்துசமுத்திரம் சார்ந்த புவிசார் அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மிக உறுதியாக உள்ளது.

அதாவது இந்துசமுத்திரத்திற்கு முகம் கொடுக்கும் இந்தியாவின் பிரதான நிலப்பகுதி தென்னிந்தியாதான். தென்னிந்திய முனை தனியரசாக இந்தியாவில் இருந்து பிரியுமானால் இந்தியாவின் கட்டமைப்புக் குலைந்து கடல்சார்ந்த பகுதியால் இந்தியா பெரிதும் குலைந்து பல நாடுகளாகிவிடும். இந்தியாவை ஒன்றாக வைத்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் ஏதுவாக உள்ளன. ஒன்று இந்துமதம், இரண்டு பிரிந்திடக்கூடாது என்ற மேற்குலகின் கொள்கை.

இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே மேற்குலகம் உணர்ந்துதான் பல்லின, பல மொழித் தன்மை வாய்ந்த இந்தியாவை இந்து மதத்தால் ஓர் அரசாக பேண மேற்குலகம் சிந்தித்துள்ளது. இது இந்தியாவின் மீதான பற்றுப் பாசத்தாலோ அன்றி ஏதாவது ஒரு தர்ம உணர்வினாலோ தோன்றிய கொள்கையல்ல.

புவிசார் நிலைமையின் கீழும், புகோள அரசியல் ஆதிக்கத்தின் பொருட்டு சீனா மேற்கொள்ளக்கூடிய அதன் தலையெடுப்பை எல்லைப்படுத்தக்கூடிய அவசியத்தின் பேரிலும் மேற்குலம் இத்தகைய கொள்கையை வகுத்துக் கொண்டது.

இவ்வகையில் தற்போது இந்துசமுத்திரத்தில் மேற்குலகின் தலைவனாக அமெரிக்காவும், அடுத்து சீனாவும், இப்பிராந்தியத்தில் உள்ள இந்தியாவும் இந்துசமுத்திர பிராந்தியத்தில் தத்தம் தேவைகளுக்குப் பொருத்தமான மதிப்பீடுகளின் அடிப்படையில் இப்பிராந்திய அரசியலில் போட்டியிட்டு வருகின்றன. இப்போட்டிக்குள் அகப்பட்டிருக்கும் பலிக்கடாவாக ஈழத் தமிழர்கள் உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடல்சார்ந்த அதன் பேரரசு ஆதிக்கம் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட சோழப் பேரரசுடன்தான் உதயமாகியது. சோழப்பேரரசு கடல்சார்ந்து தென்னிந்தியாவிற்கு தெற்கே இலங்கை நோக்கியும், இந்துசமுத்திரத்தின் கிழக்கே தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கியும் தனது ஆதிக்கப் படர்ச்சியை மேற்கொண்டது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி சோழப் பேரரசு பரவிய போதிலும் அது குடியேற்ற ஆதிக்கத்தையோ அல்லது மதப்பரப்பலையோ மேற்கொள்ளவில்லை. ஆனால் இந்துக் கலாச்சாரம் அங்கு பரவியது. மதம் பரவுவதற்கு சாதிக்கட்டமைப்பு அவசியமானது. ஆதலாற்தான் அதற்கான சாதி சமூக கட்டமைப்பற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்துமதம் பரவ முடியவில்லை, இந்து கலாச்சாரம் மட்டும் பரவியது.

சாதிக் கட்டமைப்பற்ற கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்கள் உலககெங்கும் பரவ முடிந்தது போல சாதிக்கட்டமைப்பைக் கொண்ட இந்து மதத்தால் அதன் மக்கள் தொகையுடன் கூடிய நிலப்பரப்பிற்கு வெளியே பரவ முடியவில்லை.

சிங்கள அரசை சோழப் பேரரசு வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்த போதிலும், சிங்கள பகுதிகளில் அது இந்து ஆலயங்களை கட்டிய போதிலும் சிங்களவர்கள் மத்தியில் இந்து மதம் பரவ முடியாமைக்கான பிரதான காரணம் இந்துமதத்திற்குத் தேவையான சாதிக்கட்டமைப்பு அவர்களிடம் இல்லையென்பதுதான்.

அதாவது சிங்களவர்களிடம் சாதிமுறை இருக்கின்ற போதிலும் அது இந்துமத்திற்குத் தேவையான சாதிமுறை கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆதலாற்தான் சோழப்பேரரசின் ஆதிக்கத்திற்கு அது ஒரு நூற்றாண்டாய் உட்பட்டிருந்த போதிலும் அங்கு சிங்கள பௌத்தவர் இந்துக்களாக மாறவில்லை.

ஆனால் அதேவேளை அவர்கள் இந்துக் கடவுளர்களை வழிபடும் இயல்பையும் கொண்டிருந்தனர். இங்கு அவர்கள் மதத்தால் இந்துக்களாக அல்லாமல் அதேவேளை இந்துக் கடவுளர்களை வரம் வேண்டி வழிபடும் வழக்கம் உள்ளவர்களாயினர்.

சோழப் பேரரசின் காலத்தில் வணிக கணங்கள் பலம் கொண்டு எழுந்தன. பிரித்தானிய மன்னனால் பட்டையம் வழங்கப்பட்ட 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட பிரித்தானிய வர்த்தக கம்பெனிகளுக்கு நிகரான கட்டமைப்பை சோழப்பேரரசின் வணிக கணங்கள் கொண்டிருந்தன.

பிரித்தானிய வர்த்தக கம்பெனிகளின் மூலவேரை சோழர்கால வணிக கணங்களிலிலிருந்துதான் பெரிதும் அடையாளம் காணலாம். வர்த்தக கம்பெனிகளுக்கு படைகளை வைத்திருக்கும் உரிமை, நீதிவழங்கும் உரிமை உள்ளிட்ட ஆதிக்க உரிமைகள் இருந்தன. சோழர்கால வணிக கணங்கள் இதன் மூலத்தை அப்படியே கொண்டிருந்தன.

அரசு என்பது ஆயுதம் தாங்கிய இராணுவமாகும். இராணுவம் என்பது யுத்தமாகும். யுத்தம் என்பது கொள்ளையாகும். கொள்ளைக்கு பிரதியீடே வர்த்தகமாகும். எனவே வர்த்தகம் என்பது யுத்தத்திற்கும், கொள்ளைக்கும் பிறந்த பிள்ளையாகும்

. வர்த்தகத்தை இவ்வாறு புரிந்து கொண்டால் அதற்குப் பின்னால் இருக்கும் இராணுவம், யுத்தம், அரசியல் ஆதிக்கம் என்பனவற்றை புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.

இதன்படி இந்துசமுத்திர பிராந்தியத்திலும் அதற்கு அப்பால் பூகோள அளவிலும் தனது அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கத்தை விரிவாக்குவதற்கான அதன் ஈட்டிமுனை கோட்பாடாக சீனா புதிய பட்டுப் பாதை வர்த்தக கோட்பாட்டை(New Silk Route Theory) இப்போது சர்வதேச அரங்கில் முன்வைத்துள்ளது.

வட்டத்தைக் கீறி சதுரம் என்றும் சதுரத்தைக் கீறி வட்டம் என்றும் கூறும் அரசியலைப் பற்றி ஜோர்ஜ் ஓவல் தெளிவாக தீர்க்கத்தரிசனம் உரைத்திருந்தார். அதன் உச்சமாக படுகொலைக் களத்திற்கு தர்மசாலை என்றும் பெயர் சூட்டுவார்கள் என்பதும் உண்மையாகும்.

இதன்படி புதிய தாராளவாதம், புதிய பட்டுப் பாதை வர்த்தகக் கோட்பாடு என்பன மேற்படி ஜோர்ஜ் ஓவலின் கருத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாய் உள்ளன.

இன்று இந்து சமுத்திரத்தில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் புதிய தாராளவாதம், புதிய பட்டுப் பாதை வர்த்தக கோட்பாடு, புதிய யதார்த்தவாதம் என்பனவற்றிற்கான போட்டியும், யுத்தமுமே இந்துசமுத்திர அரசியலாகும். இங்கு சோசலிசம் என்றும் சனநாயகம் என்றும் தர்ம நியாயங்கள் என்றும் எதுவும் கிடையாது.

யுத்தம் அதன் நிர்வாண வடிவில் இல்லாமல் மேற்படி புதிய தாராளவாதம், புதிய பட்டுப் பாதை வர்த்தகம் என்ற ஆடைகளை அணிந்து கொண்டு தன் ஆதிக்கக் கரங்களை அப்பாவி மக்கள் மீது விரித்துள்ளது.

இத்தகைய ஆதிக்கப் போட்டி இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவையும் ஈழத்தமிழரையும் மையமாகக் கொண்டு நிகழ்கிறது. பொதுப்படையாக அரசியல் ஆராய்ச்சியாளர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் வடிவிலான கருத்தொன்றை கூறுகிறார்கள்.

அதாவது “இந்தியா இலங்கையை அதன் கொல்லைப்புறமாக பார்க்கிறது. அதேவேளை சீனா இலங்கையை தனது இந்துசமுத்திர ஆதிக்கத்திற்கான முற்றமாக பார்க்கிறது”.

எப்படியோ இங்கு முழு இந்துசமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கான அச்சாணியாக இலங்கைத் தீவை பேரரசுகள் பார்க்கின்றன. இதில் இந்தியாவின் பார்வை அதன் பாதுகாப்போடும் இணைந்ததாக உள்ளது.
இலங்கையில் காலூன்றுவதன் மூலம் இந்தியாவை தென்னாசியாவிற்குள் சிறைவைக்கவும் அத்துடன் கூடவே இந்தியாவை பலவீனப்படுத்தவும் அது ஏதுவாக அமையும் என்று சீனா நம்புகிறது.

சீனாவின் தற்போதைய கொள்கை பின்வருமாறு எளிமையாக உள்ளது. அதாவது தன்னிடமிருந்து பிரிந்திருக்கும் தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைப்பது, இந்துசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை விரிவாக்குவது, அதற்கு இந்தியாவை தென்னாசியவிற்குள் முடக்குவதும் முடிந்தவரை அதை பலவீனப்படுத்துவதும் என்ற மூன்று பிரதான கொள்கையின் அடிப்படையில் அதனுடைய பூகோள வல்லரச ஆதிக்கத்திற்கான கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பல கிளைகள் உண்டு. அவை வேறுதருணத்தில் விரிவாக நோக்கப்பட வேண்டியவை.

மேற்படி இவை அனைத்தையும் இணைத்து பார்க்கும் போது எதிர்காலத்திற்கான ஒரு படத்தை எம்மனதில் இலகுவாக வரைய முடியும். அது அமெரிக்கா – சீனா – இந்தியா சார்ந்த முக்கோண வடிவிலான போராட்டத்தினால் முதல் வட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. அதன் இரண்டாவது வட்டத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் என்பன உள்ளன.

மேலும் மூன்றாவது வட்டத்தில் ஆதிக்க அடிப்படையில் ரஷ்யாவும், வாழ்நிலை அடிப்படையில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. மேலும் சிரியாவில் நிரந்தர இராணுவத் தளங்களை ரஷ்யா அமைக்க கடந்த 7ஆம் தேதி ரஷ்ய நாடாளுமன்றம் அனுமதித்துள்ளதோடு ரஷ்யாவின் இந்துசமுத்திரத்திற்கான பிரவேசத்திற்கு மணியோசை எழும்பியுள்ளது.

இப்பின்னணியில் மேற்கூறப்பட்ட அனைத்து நாடுகளினதும் அரசியல் நலன்களுக்குள்ளும் போட்டிகளுக்குள்ளும் சிக்குண்டுள்ள ஒரு தீவாக உள்ள இலங்கையில் அரசற்ற இனமாக வாழும் ஈழத் தமிழர்களே அதிகம் பலியிடப்படக்கூடிய ஏதுநிலையைக் கொண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு நோக்கில் இருந்துதான் இந்த பிராந்தியத்தின் அரசியலையும் சமாதானத்தையும் நாம் பார்வையிட வேண்டும்.

இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அதாவது “பேய்களோடு மட்டுமல்ல பிசாசுகளோடும் கூட்டுச்சேர தயார்” என்று தமிழ் மக்களுக்கு எதிரான, பாதகமான தனது அரசியல் கொள்கையை அன்றைய சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1980களில் கூறியிருந்தார்.

தமது சொந்நாத மக்களான ஈழத் தமிழர்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு இந்த நாட்டை சுபிட்சமான பாதையில் வழிநடத்துவதற்குப் பதிலாக ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு அந்நிய நாடுகளிடம் சரணடைந்து, அந்த அந்நியநாடுகளிடம் இலங்கைத் தாரைவார்த்துக் கொடுக்கும் இரத்தம் தோய்ந்த அரசியலிற்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

தமது சொந்த சகோதர இனத்துடன் அதிகாரத்தை பங்கிட மறுத்து அந்நியர்களிடம் இலங்கைத் தாரைவார்க்கும்; அரசியல் போக்கில் முதற் பலிக்காடாவாகுவது அப்பாவி ஈழத் தமிழர்கள்தான் என்பதை புவிசார் அரசியல், பூகோள அரசியல் வரலாறு பதிவு செய்கிறது.

–மு.திருநாவுக்கரசு–