ஊழல் மோடிகளுக்கு துணைபோன அரசியல்வாதிகளை பாதுகாக்கும் ஐக்கிய தேசிய கட்சியிடம் நாட்டு மக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இடம் பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவினை எதிர்க் கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டியுள்ளோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தகுதி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபை தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கில் தோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்தே தேர்தலை நடத்தினார். இந்நிலையில் தேர்தலின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மக்களின் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்துக் கொள்வதற்கான வழிமுறைகள் ஜனநாயக ரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
தற்போது காலவரையறையின்றி மாணா சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணைக்குழுவினை ஒருபோதும் குற்றஞ்சாட்ட முடியாது. ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து கிடைக்கப் பெற்ற படுதோல்யின் காரணமாகவே மாகாண சபை தேர்தலையும் பிற்போட்டுள்ளது. தேர்தல் திருத்த முறைமையில் சில சிக்கல் நிலை காணப்படுகின்றது. இவைகளை திருத்திக் கொண்டு தேர்தலை விரைவாக நடத்தி மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.
உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்தலை பிற்போட்டு மக்களின் ஜனநாயகத்தை அவமதித்துள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் உரிய பாடத்தை விரைவாக புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

