போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை தீர்வாகாது -திஸ்ஸ

278 0

போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பல எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் தீர்மானங்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கின்றார் என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ  விதாரண தெரிவித்தார்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையினை  வழங்குவதாக  ஜனாதிபதி அறிவித்ததில் இருந்து மேற்குலக நாடுகள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றார்கள்.  எதிர்ப்புகளை மீறி  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பொருளாதார  தடை விதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டிலே சர்வதேச  அமைப்புக்கள்  உள்ளன.  மரண தண்டனையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல மாட்டோம்  என்று   கடந்த வருடம்  ஐக்கிய  நாடுகள் பொதுச்சபையில் 120  நாடுகள்  கைச்சாத்திட்டுள்ளது. இதில் இலங்கையும் ஒரு நாடாகும்.

போதைப்பொருள் ஒழிப்பிற்கு  மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது.  அரசியல்வாதிகளின்  ஆதரவுடனே  நாட்டுக்குள்  போதைப்பொருள் ஊடுறுவுகின்றது.  நாட்டுக்குள் போதைப்பொருள் எவ்வழியில் வருகின்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை கொல்வதால்  பிறர் போதைப்பொருளை பாவிக்க மாட்டார்கள் என்ற   ஜனாதிபதியின்   வாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.