தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும்நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்?

50 0

தமிழகத்தில் பலமுறை ஆட்சியில் இருந்தும் நதிகள் இணைப்பு திட்டத்தை தி.மு.க. மேற்கொள்ளாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மு.க.ஸ்டாலின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி இன்று பேசுகிறார். தண்ணீர் பிரச்சினை உடனே ஏற்பட்ட பிரச்சினையா?. பலமுறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க.வுக்கும், பல ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கெடுத்த தி.மு.க.வுக்கும் இதில் பங்கில்லையா?. பங்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர முயற்சித்த வீராணம் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் வராமல் தடுத்தவர்கள் தி.மு.க.வினர்.
தேசிய நதிகளை நிறை வேற்றாவிட்டாலும் தென்னக நதிகளான மகாநதி – தாமிரபரணி இணைப்புக்காவது முயற்சி செய்திருந்தால் தமிழகம் பலன் பெற்றிருக்கும். இதற்கு தமிழகத்தை பலமுறை ஆண்ட மு.க.ஸ்டாலின் கட்சியின் பதில் என்ன?.
இன்று என்ன பெரிய குஜராத் ‘மாடல்’ என கிண்டல் செய்யும் மு.க.ஸ்டாலினுக்கு நான் சொல்லிக்கொள்வது, குஜராத் நர்மதா நதியில் இருந்து ஒரு இணைக் கால்வாய் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 56 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டது. இதற்கு முன்னால் அந்தப்பகுதி பெண்களை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் 8 கிலோ மீட்டர் தூரம் தண்ணீருக்கு பெண்கள் குடத்துடன் அலைய வேண்டும். ஆனால் இந்த நர்மதா திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அங்கே குடிநீர் பிரச்சினையும் தீர்ந்தது… நல்ல விவசாயமும் நடக்கிறது… இதேபோல தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் கட்சி என்றாவது யோசித்தது உண்டா?.
ஒரு கால்வாய் தண்ணீரே ஒரு பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கியது என்றால் நதிகள் இணைப்பு, கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலே தமிழ்நாடு சோலைவனம் ஆகியிருக்கும். இத்தகைய முயற்சியை மக்கள் பலமுறை ஆள வாய்ப்பு கொடுத்தும் தி.மு.க. ஏன் மேற்கொள்ளவில்லை?.
ஆக நாட்டு மக்களுக்கு வளர்ச்சியைத் தர பா.ஜ.க. கூட்டணியால் மட்டுமே முடியும் அதன்படி உடனே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் திட்டம்தான் காவிரி – கோதாவரி இணைப்புத்திட்டம். ஆக இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும், தமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்டும். ஆனால் இதை குறை கூறுவதற்கோ, அரசியல் லாபம் தேடுவதற்கோ மு.க.ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.