எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

52 0

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் குடிநீர் வினியோகம் குறித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டங்கள் குறித்த கையேட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சென்னை நீங்கலான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கோடைக்கால குடிநீர் தேவையை சமாளிக்க மொத்தம் சுமார் ரூ.675 கோடி மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட வறட்சி நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், மட்டும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தமிழக அரசால் ரூ.15,838 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் கட்டமைப்புகளுக்கு தகுந்தவாறு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் வினியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம். எதிர்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளை பரப்பக்கூடாது.
சென்னையில் காலை 6 மணி முதல் குடிநீர் வினியோக பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.
குடிநீர் வினியோக பணிகளை கண்காணிக்க ‘கைசால் ஆப்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் அனைத்து விதமான புகார்களை 044-45674567 என்ற தொலைபேசி எண் மூலம் 24 மணி நேரமும் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் தெரிவிக்கலாம். குடிநீர் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 2017-ம் ஆண்டு 450 மில்லியன் கன அடி தண்ணீர் தான் தினசரி வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 525 மில்லியன் கன அடி தண்ணீர் கொடுத்து வருகிறோம். நவம்பர் மாதம் முடியும் வரை இந்த அளவு தண்ணீர் வினியோகிக்கப்படும்.
முந்தைய காலங்களில் சென்னைக்கு 7 ஆயிரம் லாரிகள் தண்ணீர் தான் வழங்கி வந்தோம். இப்போது 9 ஆயிரத்து 100 லாரிகளாக அதிகரித்து உள்ளோம். இதை 10 ஆயிரம் லாரிகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பள்ளிகளுக்கு தனி அதிகாரிகள் போட்டு தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வருகிறோம்.
ஐ.டி. நிறுவனங்களோ, ஓட்டல்களோ தண்ணீர் பிரச்சினையால் விடுமுறை அளிக்கவில்லை. ஐ.டி. நிறுவனங்களில் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நிலை ஏற்கனவே இருந்து கொண்டு தான் இருக்கிறது. தண்ணீர் பிரச்சினைக்காக வீடுகளில் இருந்து வேலை செய்வது இல்லை. ஐ.டி. நிறுவனங்கள், ஓட்டல்கள் தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். தற்போது, அவர்கள் தண்ணீர் எடுக்கும் தூரம் சற்று அதிகரித்து உள்ளதால் சற்று கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும், கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
ஓட்டல்களில் பிளேட்டுகளை கழுவ தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால், வாழை இலை, பாக்கு மட்டையை பயன்படுத்த அவர் களே தயாராகி விட்டனர். ஐ.டி. நிறுவனங்களை பொறுத்தவரையில் தண்ணீர் பிரச்சினையால் வேலைக்கு இடையூறு என்ற நிலை இல்லை. அதுபோன்ற நிலை இருந்தால் நாங்கள் உடனடியாக நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம்.
இயற்கையாக மழை அளவு குறைந்ததன் காரணமாக தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலையில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆனால், இங்கு இந்த பிரச்சினையை வேறு மாதிரியாக கொண்டு செல்கிறார்கள். ஓட்டல்களில் சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லாமல் லாட்ஜ்களை மூடுகிறார்கள் சென்னைக்கு வராதீர்கள் என்று தவறான பிரசாரங்களை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.