நாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும்- டிலான்

63 0

நாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் அபிப்ராயத்தைக் கோரி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

அமைச்சரவையை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டப்படாமல் இருந்திருந்தால் அரசியலமைப்பின் அடிப்படையில் புதிதாக ஒரு பிரதமரை நியமிக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.

அரசியலமைப்பின் 46 (2) ஆம் அத்தியாயத்தின் படி தொடர்ந்து அமைச்சரவை கூட்டாவிட்டால் அதே சந்தர்ப்பத்தில் பிரதமருக்கான அதிகாரங்கள் இல்லாமல் போகும்.

இதன் போது புதிய பிரதமர் ஒருவர் அரசியலமைப்பின் பிரகாரம் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதிதாக ஒரு பிரதமரை நியமிப்பது சாத்தியமற்றது.

காரணம் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாராளுமன்றத்தில் 113 பெரும்பாண்மை கிடையாது. இவ்வாறிருக்கையில் புதிதாக ஒரு பிரதமரை தெரிவு செய்வது கடுமையானது.

இதனால் நாட்டில் மீண்டும் பாரியதொரு நெருக்கடி ஏற்படும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு தற்போது முழுமையாக சீர்குழைந்துள்ளதால் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மக்கள் அபிப்ராயத்தை நேரடியாகக் கோர முடியும். ஆனால் தேர்தலுக்குச் செல்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் பொதுசன அபிப்ராயமே சிறந்த வழியாகுமென அவர் தெரிவித்தார்.