ஞானசார தேரரைப் போல் சண்டித்தனம் செய்கிறதாம் புரவெசி பலய!

300 0

dilanநல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பாடுபட்ட புரவெசி பலய என்ற மக்கள் சக்தி அமைப்பு சண்டித்தனம் புரிகின்ற பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைப் போன்று செயற்பட்டு வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு டாலி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று பகல் நடைபெற்றது. இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த டிலான் பெரேரா, புரவெசிபலய அமைப்பு தங்களுக்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தை மாற்றியமைத்துக் கொள்ள முயற்சிப்பதாக சாடினார்.

“புரவெசிபலய அமைப்பு வழக்கு விசாரணை செய்கின்றது. தீர்ப்பையும் அந்த அமைப்பே நிர்ணயிக்கின்றது. அந்த அமைப்பில் சிலர் மருத்துவர்களாக உள்ளனர். ஆயினும் மருத்துவத்தை விடுத்து வேறு அனைத்து கருமங்களையும் செய்வார்கள். பிரதமரின் அலுவலகத்தின் ஊடாக அவர்கள் சுற்றுலாவும் செல்வார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சந்திரிகா குமாரதுங்கவுக்கும், எனக்கும் இடையே இந்த கருத்து மோதல் உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அதிகாரப் பரவல் என்ற விடயத்தை இந்த நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் எடுத்துச் சென்றவர் சந்திரிகா குமாரதுங்க ஆவார். அவரது அந்த செயற்பாடுகளில் இருந்து நான் விலகியே இருக்கின்றேன். சந்திரிகா குமாரதுங்கவுடன் கருத்து மோதலில் நான் ஈடுபடும்போது டிலான் பெரேரா ஈனச் செயலை புரிவதாகவும் இதற்கு ஜனாதிபதி ஏன் தலையிடுவதில்லை என்றும் புரவெசிபலய அமைப்பின் பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி எழுப்புகின்றார்.

சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை மேற்கொள்வது யார் சரத் விஜேசூரியவா? சுதந்திரக் கட்சிக்குள் அரசியல் கருத்து பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு எமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? அதற்கும் சாதாரண சமூக அமைப்பிடம் அனுமதி கோர வேண்டுமா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரா உணவு உட்கொள்வதற்கும் அந்த அமைப்பிடம் அனுமதி கேட்கவேண்டுமா? நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்து மூன்றாவது திருமணம் செய்வதற்கும் அவர்களிடம் அனுமதி கேட்பதா? இந்த நாட்டிலுள்ள அனைவரும் அவர்களிடம் அனுமதி கேட்கவேண்டுமா?

இந்த அமைப்பின் செயற்பாடுகள் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாக காணப்படுகின்றது. ஞானசார தேரர் காவியுடை அணிந்து சண்டித்தனம் காட்டினார். ஆனால் சாதாரண சமூக அமைப்பு காவியுடை இன்றி அதே செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதுவா நல்லாட்சி? அரசாங்கத்தை அமைக்க பாடுபட்டிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசாங்கமும் அவர்களுடையதா?”

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸின் இராஜினாமாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை. “அவன்காட் விவகார சம்பவம் ஆயுதங்கள் தொடர்பான கட்டளைகள் சட்டத்தின் கீழ் இதனை சம்பந்தப்படுத்த முடியும் என்பதை நான் அறிகின்றேன். ஆனால் இந்த விவகாரம் ஊழல் மோசடி தவிர்ப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு சம்பந்தப்படும்?

ஒரு சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவிடப்பட்டால் அச்சட்டத்தில் இருந்து விலக்கி நிரூபிக்கப்பட முடியாத ஒரு சட்டத்தில் வழக்கு தொடர்பாக சட்டவிவகாரம் குறித்து குறைந்த அறிவுள்ள என்னைப்போன்ற சிலர் கேள்வி எழுப்பும்போது சிறந்த சட்ட ஆலோசனைகளைப் பெறுகின்ற ஜனாதிபதிக்கு அதுபற்றி பேச முடியாதா? நீதிக்கட்டமைப்பைப் பார்க்கும்போது இப்படியான நிலையை புரிந்துகொள்ள முடிகின்றது. அதேபோன்று ஜனாதிபதி தனது உரையில் எந்த இடத்திலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸின் செயற்பாடு தொடர்பாக கூறியிருக்கவில்லை. ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழு தொடர்பாகவே கூறியிருந்தார். தில்ருக்ஷி டயஸ் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர் அல்ல” என்று குறிப்பிட்டார்.