நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது – மஹிந்த அமரவீர

271 0

ரிஷாத் பதியுதீன் இராணுவத்தளபதியுடன் தொலைபேசியில் பேசி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு அழுத்தம் பிரயோகித்தாரா அல்லது நிலைவரம் குறித்து வினவினாரா என்பது தொடர்பில் இராணுவத் தளபதியை அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, அவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் ரிஷாத் பதியுதீன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.

சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ரிஷாத் தனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரையாடினார் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறிருந்தும் சுதந்திர கட்சி ஏன் இன்னும் அது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

ரிஷாத் பதியுதீனை பாதுகாக்க வேண்டும் என்ற தேவை எமக்கு கிடையாது. அவருக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியாக தீர்மானிக்கப்படும். ரிஷாத் பதியுதீன் மாத்திரமல்ல பயங்கவாதத்திற்கு ஆதரவளித்தவர்கள் யாராக இருந்தாலும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதே வேளை நம்பிக்கையில்லா பிரேரணைகளைக் கொண்டு வருவதன் மூலம் மாத்திரம் பயங்கவாதத்தை ஒழித்துவிட முடியாது.