ஒடிசாவில் நவீன்பட்நாயக் அமோக வெற்றி- மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார்

81 0

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது.

147 இடங்களை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது.

பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) ஆகியவையும் களத்தில் நின்றன. ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட் நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலை பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். இதனால் பிஜுஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை.

பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது.

நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்-மந்திரி ஆக உள்ளார். அவர் 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபித்து ஒடிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் 117 தொகுதிகளை வென்று இருந்தது.