விசேட பிரதிநிதிகளின் வாகனங்கள் செல்லும்போது வீதியை மூடவேண்டாம் -சிறிசேன

300 0

விசேட பிரதிநிதிகளின் வாகனங்கள் செல்லும்போது வீதியை மூடவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்கள் பயணிக்கும்போது பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதால் வீதியை மூட வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் விசேட பிரதிநிதிகளின் வாகனங்கள் செல்வதற்காக பொதுமக்கள் வீதிகளில் மறிக்கப்பட்டமை காரணமாக அவர்கள் தமது வாகனங்களின் ஒலியை எழுப்பி தமது கோபத்தை வெளிப்படுத்தினர்.

கொழும்பில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

யுத்தம் இடம்பெற்றபோதே, விசேட பிரதிநிதிகளின் வாகனங்கள் செல்லும்போது வீதி மூட வேண்டிய நிலை காணப்பட்டது. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபின் அந்த நிலை மாற்றப்பட்டது.

ஆனால் கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து விசேட பிரதிநிதிகள் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்வதற்காக வீதிகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.