வட பகுதியில் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்பு-ஜனாதிபதி

361 0

maithripala-sirisenaவடக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல் அநுராதபுரம் மகாஜன விளையாட்டரங்கில் நடைபெற்ற 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
ஏனைய அனைத்து துறைகளையும் நாம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், விவசாயம், நீர்பாசனம், சுகாதார சேவை இந்த அனைத்து துறைகளுக்கும் அரசாங்கம் என்ற விதத்தில், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு கரண்டி, மற்றைய மாவட்டத்திற்கு மற்றுமொரு கரண்டி, அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ற விதத்தில் அபிவிருத்தியின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படாது. தேசிய அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தேசிய அபிவிருத்திக்கு தேவையான முக்கியத்தை அடையாளம் கண்டுக்கொண்டு, அதனூடாக சமமான அபிவிருத்தி வழங்கப்படும். இந்த நடவடிக்கையை நாட்டிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. 20 வருடத்திற்கும் அதிகமான காலம் யுத்தம் ஒன்றை ஏன் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அனைத்து அரசாங்கங்களும் எவ்வாறு கவனித்தது என நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதன் பிரதிபலனே வன்முறை. அதன் பிரதிபலனே யுத்தம்.

அதன்பிரதிபலன் தான் தனி நாட்டு கோரிக்கை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து ஏற்பட்ட யுத்தம். பயங்கரவாதம் என்ற விதத்தில் அவர்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.

1947ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியிலிருந்து கடந்த 6 அல்லது 7 தசாப்தங்களை நாம் எடுத்து பார்க்கும் போது வடபகுதியில் எத்தனை அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன? பிரதி அமைச்சு பதவிகள் எத்தனை வழங்கப்பட்டுள்ளன?

நாட்டின் அபிவிருத்தியின் முன்னுரிமையை அடையாளம் கண்டுக்கொண்டிருந்தனரா? கடந்த காலங்களில் அரசாங்கத்தை ஸ்தாபித்தவர்கள் தமது பிரதேசம் குறித்து மாத்திரமே சிந்தித்தனர்.

வடக்கு பகுதியை மறந்திருந்தார்கள். வடபகுதி மக்கள் போராட்டங்களை நடாத்தினார்கள். இறுதியில் ஆயுதத்தை கையில் ஏந்தினார்கள்.

அதனால் தமது கடமைகளை நிறைவேற்ற தவறியவர்களை நாம் குறை கூற வேண்டுமே தவிர, இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது கோரிக்கைக்காக குரல் எழுப்புவோர் மீது குறை கூற கூடாது.
என்று மேலும் தெரிவித்தார்.