அங்கிலிகன் தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகள் இரத்து

411 0

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான  நாளை தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகளை கத்தோலிக்கத் திருச்சபை இரத்துச்செய்திருக்கின்ற அதேவேளை, அங்கிலிகன் திருச்சபை அதன் ஆராதனைகளை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் அங்கிலிகன் திருச்சபை அதன் பெரும்பாலான தேவாலயங்களில் ஆராதனைகளை நடத்தியது.

ஆனால் ஆராதனைகளை நடத்துவதற்கு தேவாலயங்கள் பாதுகாப்பாக இருக்கின்றதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற பொறுப்பை ஒவ்வொரு பங்குத்தந்தைக்கும் அது வழங்கியிருந்தது. சில அங்கிலிகன் தேவாலயங்கள் ஆராதனைகளை இரத்துச்செய்து, தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளில் கூடி தனிப்பட்ட ஆராதனைகளை நடத்திய அதேவேளை, ஏனையோர் தேவாலயங்களில் தமது ஆராதனைகளை நடத்தினர்.

இவ்வார ஆரம்பத்தில் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் டிலோராஜ் கனகசபை விடுத்திருந்த அறிக்கையொன்றில், பல அங்கிலிகன் தேவாலயங்கள் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் அவற்றின் வழமையான சேவைகளை நடத்தியதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

கடவுளை வணங்குவதற்கு அஞ்சவில்லை என்ற போதிலும் பாதுகாப்புத் தேவைகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக சமாதானமான முறையில் சகவாழ்வை நடத்திவருகின்ற முஸ்லிம் சமூகத்தை இந்நாட்டுப் பிரஜைகள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் அரவணைத்துச் செயற்படவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.