போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது-குருகுலராஜா

227 0

kuru-unஇலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழர்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலை போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது என வடமாகாண பதில் முதலமைச்ச ர் த.குருகுலராஜா கூறியுள்ளார்.

ஐ.நா சபையின் சிறுபான்மை இனங்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் றீட்டா இஷாக் நாடியாவுக்கும் பதில் முதலமைச்சர் த.குருகுலராஜாவுக்குமிடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போதே தாம் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் முதலமைச்சர் த.குருகுலராஜா கூறியுள்ளார். சந்திப்பு தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

சிறுபான்மை மக்கள் மீது சுமத்தப்படுகின்ற அடக்கு முறைகள் தொடர்பாக அவர் பிரதானமாக கேட்டறிந்து கொண்டார். இதன்போது வட கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களுக்கு முடிவு இல்லை.

மேலும் சிறைகளில் உள்ள கைது செய்யபட்டவர்களுக்கு முடிவு இல்லை. தமிழ் மக்களுடைய நிலத்தில் படையினர் நிலை கொண்டிருப்பதனால் ம க்கள் அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள குடியேற முடியாத நிலை உள்ளமை தொடர்பாகவும்,

மத்திய அரசா ங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி சார் விடயங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலையே இப்போதும் உள்ளமை தொடர்பாக கூறியிருந்தோம்.

மேலும் பெரும்பான்மை இனத்துடன் நல்லிணக்கம் உருவாகும் சாத்தியம் உள்ளதா என அவர் வினவினார்.

அதற்கு நாம் பதிலளிக்கும்போது, முதலில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீரக்கப்படவேண்டும். அதன் பின்னர் நாம் நல்லிணக்கத்தை நோக்கி நகரலாம் என கூறினோம்.

இந்நிலையில் இலங்கையில் சிறுபான்மை இனமாக உள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக ஐ.நா சபையில் அறிக்கை ஒன்றை நிச்சயமாக சமர்ப்பிப்பேன் எனவும், அதனை வடமாகாண சபைக்கு அனுப்புவேன் எனவும் கூறியதாக பதில் முதலமைச்சர் மேலும் கூறினார்.