பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

302 0

11112சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த வரைபிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக சிவில் சமூகத்தினர் ஏற்கனவே தங்களது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.அத்துடன், புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக இதுவரை எந்தவொரு தகவலையும் அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறான நிலையிலேயே இந்த சட்டமூலத்திற்கான வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான சட்டமூல வரைபை சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டமூல வரைபு சம்பந்தப்பட்ட அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவிற்கு முன்வைக்கப்படவுள்ளது.

மேற்பார்வைக் குழுவினால் இது ஆலோசனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், தேவையான திருத்தங்களுடன் இது நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.