திட்டமிட்ட இலக்குகளின் ஒரு பகுதியை மட்டுமே நாம் கட்டுப்படுத்தியுள்ளோம் – ரணில்

263 0

முஸ்லிம் மக்களுக்கும் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அனைவரையும் இணைத்துக்கொண்டு நாம் இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமறத்தில் இன்று பிரதமர் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து எமது அனுதாபங்களை நாம் வெளிப்படுத்துகின்றோம். இன்று நாம் உலகளாவிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்ற பயங்கரவாத நகர்வின் பின்னும் உலகளாவிய பயங்கரவாத இனைப்புகள் உள்ளமையே உண்மையாகும். 

இதற்கு முன்னரும் நாம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தோம். இதன்போதும் நாம் கீழ்மட்டம் வரையில் நாம் அவதானம் செலுத்திய காரணத்தினால் தான் யுத்தத்தை வெற்றிகொண்டோம். 2009 ஆம் ஆண்டுடன் அனைத்துமே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று இருப்பது  விடுதலைப்புலிகளின் அரசியல் பயங்கரவாதம் அல்ல. இது உலகளாவிய பயங்கரவாதம். சர்வதேச நாடுகள் இதில் பாரிய அளவில் முகங்கொடுத்து வருகின்றனர். லண்டன் நகர் இதற்கு பாரிய அளவில் முகங்கொடுத்து வருகின்றது. 

உலகளாவிய பயங்கரவாத சுட்டெண் பிரகாரம் மதரீதியிலான பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. சர்வதேசம் இதனை சுட்டிக்காட்டி வருகின்றது. மதவாத ஜிஹாதி யுத்தம் என்று கூறினாலும் கூட இது பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ்தான்  வருகின்றது. இன்றுள்ள பயங்கரவாதம் திட்டமிடப்பட்ட நீண்டகால இலக்கை கொண்ட பயங்கரவாதம். இதில் ஒரு சிலர் இங்கு இருந்தாலும் கூட இதன் பின்னணி பாரிய திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இவர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மட்டுமே நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். அதேபோல் இந்த குழுவின் இரகசிய தன்மை வெளிவந்துள்ளது. இதனை திட்டமிடும் நபர்கள் ஆயுதங்களை கொண்டுவரும் நபர்கள், தற்கொலை குண்டுதாரிகள் உள்ளனர். அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் புலனாய்வு உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போது அவசரகால சட்டம் மூலமாக இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இவர்களை கைதுசெய்யும் அதிகாரம் இராணுவத்துக்கும், தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருசிலர் இப்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்,. முக்கியமானதகவல்கள் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.