சுதந்திரகட்சியின் மேதினக் கூட்டம் உறுதியில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டி

322 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகும். மே தினக் கூட்டம் என்பது ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற பிரதான தலைவர்களாலும், ஏனைய பிரதான கட்சிகளாலும் நடத்தப்படுபவையாகும்.

எனவே இவற்றில் பெரும்பாலான பொது மக்களே கலந்து கொள்வார்கள். அவர்களின் நலன் கருதி மே தினக் கூட்டத்தை இரத்து செய்வதே சிறந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமைக்காரியாலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பொது மக்களை இலக்கு வைத்தே குண்டு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மே தினக் கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அவர்களது பாதுகாப்பை தற்போது உறுதி செய்ய முடியாது. மேதினக் கூட்டங்களின் போது இவ்வாறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற நிலைவரம் சிறந்ததல்ல. மே தினக் கூட்டத்தை விடவும் மக்களின் பாதுகாப்பே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.