மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் 13வது திருத்தத்தை மீறுகிறது – டலஸ்

213 0

மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய தேசிய கட்சி   தொடர்ந்து  அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மீறுவதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பற்றி கருத்துரைக்கும்   அரசாங்கத்திற்கு தேர்தல் உரிமை  மீறப்படுவது தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது.   இவ்வருடத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகத்திற்கிடமானது.  இம்மாதத்துடன்  மேல்மாகாண சபையின் பதவி காலமும்  முடிவடைந்து  08 மாகாணங்கள் ஆளுநரது   நிர்வாகத்தின் கீழ்  முழுமையாக உள்ளடங்கப்படும்.

மாகாண சபை முறைமையினை உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சியே இன்று  மாகாண சபை முறைமையை  இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. எல்லை  நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை  விரைவாக   நடத்தும் நோக்கில்  எல்லை நிர்ணய மீளாய்வு   குழு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டது. 

மாகாண சபை தேர்தலை  விரைவுப்படுத்தும் எவ்வித   நடவடிக்கைகளும்  எல்லை நிர்ணய மீளாய்வு குழுவினரால்  இதுரை  மேற்கொள்ளப்படவில்லை. மாறாக காலதாமதப்படுத்தும்  செயற்பாடுகளே இடம் பெறுகின்றன.  

பிரதமரின்  தலைமைத்துவத்தில் இக்குழு  செயற்படுவதால்  அறிக்கை  விரைவாக  கிடைக்கப் பெறும் என்று குறிப்பிட முடியாது.   ஐக்கிய தேசிய கட்சியின்  பலவீனம் தேர்தலுக்கு செல்வதே.  இதன் காரணமாகவே   மாகாண  சபை தேர்தல் பிற்போடப்படுகின்றது.  

அரசாங்கம்  மாகாண சபை தேர்தலை  பிற்போடுவதற்கு  பல காரணிகளை குறிப்பிடலாம். ஆனால் இவ்வருடம்   நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற வேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிற்போடுவதற்கு எவ்வித  காரணிகளும் அரசாங்கத்தின் வசம் கிடையாது.இடம்பெறவுள்ள அனைத்து தேர்தலுகளும்   ஐக்கிய தேசிய கட்சிக்கு  பாரிய  பின்னடைவினை   ஏற்படுத்தும் என்றார்.