ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்த வேண்டிய தேவை கிடையாது – துமிந்த திஸாநாயக்க

230 0

ஜனாதிபதி தேர்தலை காலந்தாழ்த்தவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. 

ஜனாதிபதியுடைய நிதி ஒதுக்கீட்டைக் கருத்திற் கொண்டு இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பில் நாம் கலந்து கொள்ளமல் இருந்தமைக்காகவே இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடும் காணப்பட்டமையால் தான் சுதந்திர கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.அதனைக் கரணம் காட்டி ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையப் போவதாக சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய எந்த தேவையும் எமக்கு கிடையாது.

அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியுடனும் நாம் இணையப் போவதில்லை. 

இவ்வாறு முன்வைக்கப்படும் போலியான விமர்சனங்களுக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டத்தை தோல்வியடையச் செய்ய முடியவில்லை என்பதற்காகன பொதுஜன பெரமுன எம் மீது குற்றம்சாட்ட முற்படுகின்றது. 

அவர் குறிப்பிடுவதைப் போன்று நாம் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதனை தோல்வியடையச் செய்யக் கூடிய பெரும்பான்மையை பெற்றிருக்க முடியாது. எனவே இவ்வாறான விடயங்களை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகும் என அவர் தெரிவித்தார்.