தனித்து களமிறங்குவதே நிலைப்பாடெனில் இனியும் பேசிப் பயனில்லை-மஹிந்த அமரவீர

481 0

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு  தனித்து தேர்தலில் களமிறங்க முடியுமென்றால் எம்முடன் பேச்சுவாரத்தை நடத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி பேச்சுவார்த்தையே பொது இணைக்கப்பாட்டை எட்டும்  இறுதிப் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் தேசிய அரசாங்கம் குறித்து நாம் ஆராயவில்லை, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றால் நான் கட்சியின் செயலாளர் என்ற வகையில்  கைச்சாத்திட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. இணையும் நோக்கமும் இல்லை. பொய்யான காரணிகளை பொதுஜன முன்னணியினரே பரப்புகின்றனர் ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். எமக்கு அது நன்றாகவே தெரியும் என்றார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நடத்தவுள்ள பேச்சுவாரத்தை நகர்வுகள் மற்றும் தேசிய அரசாங்கமாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பயணிக்கவுள்ளதாக கூறப்படும் காரணிகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.