
சிறந்த பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்தால் நாடு செழிக்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து வல்லம்படுகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தேர்தல் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கிற மிக முக்கியமான தேர்தல். ஒரு சிறந்த பிரதமர் தலைமையில் ஆட்சி அமைந்தால் தான் நாடு செழிக்கும். நமது கூட்டணி கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு தற்போது பிரதமராக இருக்கிற நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிறார்கள். அதற்காக நமது வேட்பாளர் சந்திரசேகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்த பகுதி வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி. நாம் ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தை நம்பி வேளாண் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். இது முற்றிலும் கலைகிற விதத்தில் கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை கொண்டு வர ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டம் நிறைவேறுகிற பொழுது நாம் தண்ணீருக்காக அல்லல் பட வேண்டிய அவசியம் இருக்காது.
சில நேரங்களில் மழை பொய்த்து போகிற போது காவிரியில் நமக்கு உரிய நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கூட கர்நாடக அரசு நிறைவேற்ற மறுக்கிறது.
ஆகவே நாம் ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசிடம் கெஞ்சி நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது மாறி ஒரு நிலையான விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் கோதாவரியில் இருந்து காவிரி மூலமாக அதை நிறைவேற்றுகிற பொழுது நம்முடைய வேளாண் மக்களுக்கு எப்போதுமே நீர் கிடைக்கும். வேளாண் பணி சிறந்து விளங்கும். அதற்கு ஜெயலலிதா அரசு முழு மூச்சுடன் நிறைவேற்றுகிற நடவடிக்கையை எடுக்கும்.
ஒரு சொட்டு நீரை கூட வீணாக்க கூடாது. அதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து ஏரிகள் தூர்வாரப்பட்டு, வண்டல் மண் அள்ளப்பட்டு, ஏரிகள் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
4 மாதங்களுக்கு ஒரு முறை சிறு, குறு விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் 45 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். அதில் 25 லட்சம் பேருக்கு வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டு விட்டது. அந்த திட்டமும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முன்னதாக சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை கடந்த 22-ந்தேதி தொடங்கினேன். அன்று முதல் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன்.
சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது. ஆகவே தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒன்றையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முழுமையாக வெற்றி பெறுவார்கள்.
அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்திலும் மக்களிடம் எழுச்சி காணப்படுகிறது. 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள்.
ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் அவசியமா? வறுமை கோடு அந்த அளவுக்கு மோசமாக உள்ளதா? என்கிறீர்கள். வறுமை கோடு என்பது தவறு. மக்களின் எதிர்பார்ப்பு அதிகம். மக்களின் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யும். இந்தியாவே கடன் வாங்கி உள்ளது. எல்லா மாநிலங்களும் புதிய திட்டங்களுக்கு கடன் வாங்குவது இயல்பு.
கடன் வாங்குவது கூட முதலீடாக வருகிறது. மின்சாரம் உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுத்து, அதில் இருந்து வருவாயை எடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கடனை அடைக்கிறோம். ஆகவே கடன் வாங்குகிறோம் என்று கூறுவது தவறு. திட்டத்தை நிறைவேற்ற அரசிடம் வருமானம் இருக்காது. பல நிறுவனங்களிடம் இருந்தும், உலக வங்கியிடம் இருந்தும் கடன் பெற்று திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆசைமணி, நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை ம.சரவணன், திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்து திருவாரூர், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

