விமலிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

283 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த 4 வருடங்களில் ஊதியம் மற்றும் ஏனைய வருமானங்களிலிருந்து ஈட்டமுடியாத 75 மில்லியன் ரூபாய் நிதி மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளராகக் காணப்பட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

முறைப்பாட்டுக்கான ஆதாரமாக முன்னிலைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அவற்றை தயாரித்த கணினி என்பனவற்றை பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ஆராய்வதற்கு அனுமதி வழங்குமாறு நாடாளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.