இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்த அரசை ஒருபோதும் ஏற்க முடியாது – விமல்

271 0

இலங்கை இராணுவத்தை சர்வதேச ரீதியாக மீண்டும் காட்டிக்கொடுத்த இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செயற்பாட்டின் மூலம், தாம் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை இந்த அரசாங்கத்தினர் மீண்டும் மக்களுக்கு உணர்த்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டின் இராணுவம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றத்தான் போரிட்டார்கள். ஆனால், தற்போதைய அரசாங்கம் இராணுவம் போரிட்டமையானது கடந்த அரசாங்கத்தின் தேவைக்காக என கருதுகிறது.

இந்த அரசாங்கம் எம்மீது அரசியல் பழிவாங்கலை மேற்கொள்கிறது. பொய் வழக்குகளை எம்மீது சுமத்துகிறது. ஆனால், இராணுவத்தை ஏன் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் எமக்கு புரியவில்லை.

ஜெனீவாவின் தீர்மானத்துக்கு அமைய பார்க்கும்போது, இந்த அரசாங்கமானது நாட்டுக்கு எதிரான ஒன்றாகவே கருதப்படுகிறது.

கலப்பு நீதிமன்ற முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியமையை நாம் வரவேற்கிறோம்.  எனினும், இந்த தீர்மானத்துக்கு இணை அணுசரணை வழங்கி, இராணுவத்துக்கு எதிராக செயற்பட அனுமதி வழங்கியமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த தீர்மானத்தை அரசாங்கம் நினைத்திருந்தால் நிராகரித்திருக்கலாம். இலங்கையில் வரலாற்றுக் காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட பிரித்தானியா, எமக்கு மனித உரிமைகளை கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.