ஆட்சி மாறினாலும் விவசாய வேலைத்திட்டங்கள் தொடர வேண்டும் – சமல் ராஜபக்ஷ

290 0

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் விவசாய வேலைத்திட்டங்களை தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டும். அத்துடன் 20 வருட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு  மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகால கொள்கையுடன் முன்னுக்கு செல்வதன் மூலமே விவசாயத்துறையை அபிவிருத்தியடையச்செய்யலாம். அரசாங்கங்கள் மாறுவதன் மூலம் விவசாய காெள்கைகள் வேலைத்திட்டங்கள் மாறாத காெள்கை ஏற்படுத்தப்படவேண்டும். அதேபோன்று விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவேண்டும்.  

மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பட்டம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்தே இதனை மேற்காெண்டோம். இதற்காக லுனுகம்வெஹர பிரதேசத்தில் நிலப்பரப்பொன்றை தெரிவுசெய்து விவசாய பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளின் பிள்ளைகள் அங்குவந்து பயிற்சிகளை பெற்று வருகின்றனர். சிலர் பட்டமும் பெற்றுள்ளனர்.

அதேபோன்று அந்த பிரதேசத்தில் விவசாய பூங்கா ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றோம். அதனை கண்டுகளிப்பதற்கு சுற்றுலா பிரயாணிகள் வருகின்றனர். வருமான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பாதுகாத்துச்செல்லவேண்டும். அத்துடன் விவசாயிகளுக்கு தொழிநுட்ப அறிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். Share