கார்பன் பரிசோதனை அறிக்கையை விட மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் ; சாலிய பீரிஸ்

351 0

மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய  கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

மன்னார் மனித புதை குழி தொடர்பாகவும்,கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளை   இன்று வெள்ளிக்கிழமை (22) மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பாகவும்,அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மனித புதைகுழியின் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. எனினும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ள விதம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

தற்போதைய கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்து கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை. மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்.மண் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட தடையப்பொருட்களின் ஆய்வுகளை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை வந்ததன் பின்னர் அணைத்து அமைப்புக்களும் இணைந்து ஒரு பொறுத்தமான முடிவுக்கு வர முடியும்.

அரசாங்கத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது பாதீக்கப்பட்டவர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக. அதன் ஒரு கட்டமாக பாதீக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்த போதும்,குறித்த கருத்து தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சிவில் அமைப்புக்களினால் முன் வைக்கப்பட்டுள்ளது. சில பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் குறித்த இழப்பீடுகள் தேவையில்லை.நீதியே தேவை என குறிப்பிட்டுள்ளனர். சில பொது அமைப்புக்கள் அதனை வரவேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.