மன்னார் மனித புதைகுழி கார்பன் அறிக்கை,நாளை இறுதித் தீர்மானம்

339 0

 மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னர் கடந்த  8 ஆம் திகதி (08-03-2019) மன்னார் புதைகுழி அகழ்வு பணியானது நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று வியாழக்கிழமை வரை   மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை (22) மன்னார்   நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தலைமையில் கூட்டம் ஒன்று இடம் பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின் பின்னரே மனித புதைகுழியை தொடர்சியாக அகழ்வு செய்வதா? அல்லது அகழ்வு பணியை முடிவுறுத்துவதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட இருப்பதுடன் , மன்னார் மனித புதைகுழி தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் இதர சான்று பொருட்களின் ஆய்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னார் நீதி மன்ற வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (22) மாலை குறித்த கூட்டம் இடம் பெறவுள்ளது. அதே நேரத்தில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வாதிடும் சட்டத்தரணிகளுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதிகளும் நாளைய தினம் இடம் பெறும் கூட்டத்திற்கு சமூகமளிக்கவுள்ளனர்.

இது வரை மன்னார் மனித புதைக்குழி பணிகளின் போது 336 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 316 மனித புதைகுழி அப்புறப்படுத்தப்பட்ட நிலையின் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிட்தக்கது.