சட்டவிரோத நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த விசேட படைப் பிரிவு

340 0

நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்படும் சட்டவிரோத முறைகளைத் தடுப்பதற்காக விசேட படைப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி  தீர்மானித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் மற்றும் பணியாளர் நாயகத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார். 

நாட்டில் பாரிய நீர்த்தேக்கங்கள், நடுத்தர அளவு நீர்த்தேக்கங்கள் என 12,000 அளவில் உள்ளன. அவற்றில் 40,000 அளவானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அவற்றில் வருடா வருடம் இலட்சக் கணக்கான மீன் குஞ்சுகள்  NAQDA இனால் இடப்படுகின்றன. கடந்த  2018 ஆண்டு மட்டும் 1100 இலட்சம் அளவு மீன் குஞ்சுகள் இடப்பட்டன. 2018 தரவுகளின் படி அவற்றில் இருந்து 86,000 இலட்சம் மெட்ரிக் தொன் அளவு மீன்கள் பிடிக்கப்பட்டன. 

ஆனால் அண்மையில் சட்டவிரோத முறைமைகள் காரணமாக இது பாதிப்படைந்துள்ளது. இதனால் மீனவர் அல்லாதவர்கள், மீனவர்களை விட சட்டவிரோதமான முறையில் அதிக மீன்களைப் பிடிப்பதால் மீன்பிடிக் கைத்தொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலின் போது இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்குப் பிரதேச மீன்பிடிப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதால் இது போன்ற விடயங்களுக்காக விசேட படையொன்று அவசியம் என்பதால் குறித்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச மட்டங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற முறைப்பாட்டுக்கு அமைய NAQDA தலைமையகத்தில் அதனை அமைக்க இராஜாங்க அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.