ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி

251 0

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த 5 ஆம் திகதி முதல் வவுனியா ரயில்வே திணைக்களம் தடை செய்துள்ளது. 

இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ரயிலை வழிமறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாருடன் தொடர்புகொண்ட ஓமந்தை பொலிசார் அப்பகுதி மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6மணியளவில் அம்பாள் வீதி ரயில்க் கடவைக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த மாதம் 25ஆம் திகதி இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயப்பங்களிப்புடன் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதிக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரயில்வே திணைக்களத்தின் அனுமதி பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு அப்பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு ரயில்வே திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது இதன் பின்னர் அவ்வீதி தண்டவாளம் இடப்பட்டு மக்கள் போக்குவரத்து மேற்கொள்ளமுடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.