வட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது – ரணில் (காணொளி)

297 0

வடக்கு மாகாணம் முழுவதும், பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும், அந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, வடக்கிற்கு விஜயம் செய்துள்ளோம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இக்கருத்தை வெளியிட்டார்.

வடக்கிற்கு பல தடவைகள் வருகை தந்துள்ளேன்.

இங்குள்ள பலருடனும் நல்ல உறவு எனக்கு இருக்கிறது.

கதிரவேலுப்பிள்ளை முதல் தர்மலிங்கம் என பலருடன் கோப்பாய் பிரதேசத்திற்கும் வந்திருக்கின்றேன்.

தற்போது தர்மலிங்கத்தின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் இந்த இடத்தில் இருக்கின்றார்.

இவ்வாறு இங்கு வந்து கட்டிடத்தை திறந்து வைப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு முக்கியமானதாக பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன.

இந்தப் பிரதேச செயலகங்கள், போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும், சரியான முறையில் செயற்படவில்லை.

ஆகையினால் அதனைச் சரியான முறையில் செயற்படுத்துவது அவசியமானது.

இங்கு பிரதேச செயலக கட்டிடத்தை திறந்து வைத்தது போன்று, ஏற்கனவே ஆறு பிரதேச செயலகங்களுக்கு, புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று, இன்னும் பல பிரதேச செயலகங்களுக்கும், புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அவற்றையும் திறந்து வைக்க இருக்கின்றோம்.

இந்தப் பிரதேசம் உள்ளிட்ட வடக்கு மாகாணப் பிரதேசம் முழுவதும், பல அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேநேரம் இந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, நாங்கள் வட பகுதிக்கு விஐயத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பில்இ நாங்கள் அறிந்துள்ளோம்.

இந்த விடயங்கள் தொடர்பில், இங்குள்ள உங்களது பிரதிநிதிகள் அடிக்கடி எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.

ஆகவேதான், அவற்றை தீர்த்து வைப்பதற்காக பல அமைச்சர்களை அழைத்து வந்திருக்கின்றேன்.

ஆகையினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியுமென்று எதிர்பார்க்கின்றோம்.

இந்த அரசாங்கத்தை பொறுத்த வரையில், நானாக எதனையும் இங்கு செய்யவில்லை.

இங்குள்ள உங்களது பிரதிநிதிகளுடன் கலந்து பேசியே, அரசு இங்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு நாம் செய்கின்ற அனைத்து நடவடிக்கைகளும், இந்த அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றது.

ஆகவே தான், வடக்கு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் நாங்கள் செயலாற்றுகிறோம் எனக் கூறிக் கொள்கிறோம்.

என குறிப்பிட்டார்.