பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கமும் அந்த மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்திலிருந்து அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி விலகுவதாக தீர்மானித்தால் அது வரவேற்கத்தக்கதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அலரி மாளிகையில் வைத்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டமைக்கு அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது விசனத்தை வெளியிட்டிருந்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்திருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்திலும் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும் அதற்கான சந்தர்ப்பத்தையும் ஐக்கிய தேசிய கட்சியே இல்லாமல் செய்தது. ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை.


