அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தி இந்து சமுத்திரத்திலுள்ள அமெரிக்க யுத்தக் கப்பல்களுக்கு யுத்த உபகரணங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்காக யுத்த தளபாடங்களை ஏற்றிவந்த அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 25 ஆம் திகதி தரையிறங்கியுள்ளது.
இவ்வாறு அமெரிக்க விமானத்தில் வரும் யுத்த தளபாடங்களை சோதனையிடுவதற்கு இலங்கை சுங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ, பொலிஸுக்கோ அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் உபகரணங்கள் இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஜோன் ஸ்டென்னிஸ் எனும் பெயரிலான அணுசக்தியில் செயற்படும் பாரிய விமானங்கள் கொண்டு செல்லும் கப்பலுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்க விமானங்களுக்கு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவுக்கு வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த தகவல்களை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த வில்லையெனவும் வார இதழொன்று அறிவித்துள்ளது.


