ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்

204 0

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன்  யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்

“நால்வரும் தம்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்டமையினால் குற்றவாளிகள் நால்வருக்கும் 3 மாதங்கள் கடுழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு. நால்வரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்தவேண்டுமென தீர்ப்பளித்தார்.

நால்வரும் இள வயதினர்களாக உள்ளனர். அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பப் பின்னணி என்பவற்றை மன்று கவனத்தில் எடுக்கிறது. அதனால் நால்வருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டுகள் காலப்பகுதியில் அவர்கள் மீளவும் குற்றச்செயலில் ஈடுபட்டால் 3 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வெறு சம்பவங்களில் 22 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

நால்வருக்கும் எதிராக தனித்தனி வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது, நால்வரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர்களுக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a comment