சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்டிக எடுக்கவும் -சிறிசேன

18975 0

விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக ஒரு காலவரையறையை நிர்ணயித்து தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சேனா படைப்புழு பரவி வருவதன் காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அச்செயலணி தினமும் ஒன்றுகூடி இந்த பேராபத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மகாவலி பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவரையும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவரையும் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அரச மற்றும் தனியார் விவசாய ஆராய்ச்சி துறைகள் மற்றும் கள அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பேராபத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவசாய சங்கங்களுக்கும் விவசாய சமூகத்திற்கும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அமைச்சர்களான பி.ஹரிஷன், தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் டி.எம்.எஸ்.திசாநாயக்க, கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.எம்.பி.வீரசேகர விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு.வீரகோன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a comment