சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு பணப்பரிசில்-பொலிஸ் தலைமையகம்

25723 69

சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு, பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக பணப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளினூடாக, சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றுவோருக்கு, இந்தச் சன்மானம் வழங்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, T-56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்போரைக் கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தனியார் உளவாளிக்கு 20 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கப்படவுள்ளன.

சந்தேக நபர் இன்றி T-56 ரக துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபா சன்மானம் வழங்க, பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.இதற்காக, தனியார் உளவாளிக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

பொலிஸ் நன்கொடை நிதியத்திலிருந்து சன்மானத்தை வழங்குவதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment