ஈராக் போன்று இலங்கையும் மாறும்? உடன் நடவடிக்கை தேவை- தயாசிறி

183 0

இலங்கைக்குள் அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றை அமைக்க தேவையான உடன்படிக்கையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகிவருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இது தொடர்பில் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்க இராணுவ வீரர்கள், இராணுவ தளபாடங்கள், தொடர்பாடல் உபகரணங்கள் என்பனவற்றை இந்நாட்டிற்கு எடுத்து வந்து இலங்கையுடன் செயற்படுவதற்கு திட்டமிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு நாட்டிற்குள் வருபவர்களுக்கு அமெரிக்க தூதரத்திலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சகல வித சலுகைகள், வரப்பிரசாதங்கள் என்பவற்றை வழங்குவதற்கும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக் உட்பட பல நாடுகளில் அமெரிக்க இராணுவ முகாம்களினால் ஏற்பட்ட பிரச்சினைகளைப் போன்று எமது நாட்டிலும் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக இது அமையவுள்ளது எனவும் இது தொடர்பில் உடன் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

Leave a comment