எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது? எதனைப் பிரதிபலித்தது!

344 0

14469558_1590134061281480_1513689935495170635_nயாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின் நீண்ட ஏழரை ஆண்டுகளில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு பெருவாரியாக இறங்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து வந்த மக்கள், பொதுத்தள போராட்ட வடிவங்களினூடு ஒருங்கிணைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ‘எழுக தமிழ்’களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. சுமார் 8,000 பேர் முற்றவெளியில் கூடியிருப்பார்கள்.

இப்போது, ‘எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்து? எப்படி முதல் வெற்றியை பதிவு செய்தது? என்பதையும், பிரதிபலிப்புக்கள் சிலவற்றையும் பார்ப்பது சில தெளிவுகளைப் பெறுவதற்கு உதவும்.

வடக்கு – கிழக்கில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பின் குறியீடுகளாக புத்த சிலைகள் இராணுவத்தினராலும் தென்னிலங்கை தரப்புக்களினாலும் அமைக்கப்பட்டுவதற்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை நடத்துவது தொடர்பிலான ஆலோசனையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் முக்கியஸ்தருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், சகோதரக் கட்சித் தலைவர்கள் சிலருடனான சந்திப்பொன்றில் முன்வைத்திருக்கின்றார். இதே தருணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றிருக்கின்றது. அங்கு, குறித்த ஆர்ப்பாட்டப் போராட்டம் தொடர்பிலான விடயத்தினை முன்வைக்குமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் சகோதரக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சிலரினால் தூண்டப்பட்டார்.

வீதிக்கு இறங்குவது, வெயிலில் விறுவிறுக்க நடப்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சி முக்கியஸ்தர்களைத் தவிர்ந்த மற்றைய புத்தஜீவிகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் எப்போதுமே தயக்கம் இருந்து வந்திருக்கின்றது. அவர்களுக்கு, போராட்டமொன்றுக்காக வீதியில் இறங்குவது தொடர்பில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. அதற்கு அவர்கள் பழக்கப்பட்டவர்களும் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கோ, ஏனைய கட்சித் தலைவர்களுக்கோ குறித்த ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை இணங்கும் என்கிற நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும், பந்தினை மைதானத்தில் அடித்துப் பார்த்திருக்கின்றார்கள்; எதிர்பாராத விதமாக தமிழ் மக்கள் பேரவையின் புத்திஜீவிகள் தரப்பும் இணங்கியிருக்கின்றது. அதனை அடுத்தே ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் கரிசனைகளை தெளிவாக முன்வைக்கும் முகமான ‘எழுக தமிழ்’ பேரணியாக மாற்றம் பெற்றது. அங்கிருந்துதான் முதல் வெற்றிக்கான பயணம் ஆரம்பித்தது.

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு சில காலம் ஆனபோதிலும் அது, மக்களின் நம்பிக்கையைப் பெறும் முகமான செயற்திட்டங்கள் எதனையும் பெரிதாக செய்திருக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பிலான பேரவையின் முன்வைப்பும் கூடப் பெரிதாகக் கவனம் பெறவில்லை. அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் விடயத்தையே பருமட்டாகப் பிரதிபலித்தது. பின்னர், மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு மொழிசார் இலக்கிய நிகழ்வொன்று நடத்தப்பட்டது. ஆனாலும், பேரவையினால் மக்களை பெருவாரியாக ஒன்றிணைக்கும் நிகழ்வொன்று நிகழ்த்தப்படவில்லை. மேல் தரப்பினைத் தாண்டித் தமிழ் மக்கள் பேரவை சாதாரண தமிழ் மக்களிடம் சென்றும் சேர்ந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், ‘எழுக தமிழ்’ தமிழ் மக்கள் பேரவைக்கு கிடைத்த எதிர்பாராத ஜக்பொட்.

கட்சிகள் சிலவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டு சில நூறு பேரின் பங்களிப்போடு முடிந்து போயிருக்க வேண்டிய ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று, ‘எழுக தமிழ்’ ஆக மாற்றம் பெற்றுப் பொதுத் தளத்தில் வந்த போது, தமிழ் மக்கள் அதன் மேல் குறிப்பிட்டளவான ஆர்வத்தை வெளியிட்டனர். இதனால், பொது அமைப்புக்களும் அதற்கு இணங்கின. அத்தோடு, தமது அரசியல் கோரிக்கைகள் சார்ந்து தமது போராட்ட வடிவங்களை மீள வடிவமைத்து முன் செல்வது தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்த தமிழ் மக்கள், எழுக தமிழை அதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கையாண்டார்கள். அதுதான், கொடும் வெயிலிலிலும் குறிப்பிட்டளவானவர்களை வீதியில் இறக்கியது. வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தாமும் பங்களித்திருக்கலாம் என்கிற ஆர்வத்தினை தூண்டிவிட்டிருக்கின்றது. இப்போது, இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அல்லது இவ்வாறான போராட்டங்களினூடான அடைவுகளை வரையறை செய்வது தொடர்பிலான தேவைப்பாடொன்று தமிழ் தரப்புக்குள் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை ஏற்கெனவே இருந்ததுதான். ஆனால், அதனையே மீளவும் கட்டமைக்க வேண்டிய தேவையுண்டு. அதுதான், ‘எழுக தமிழ்’ போன்ற போராட்டங்களின் பக்கத்தில் மக்களின் பக்களிப்பை எதிர்காலத்தில் வைத்துக் கொள்ளவும் உதவும்.

‘எழுக தமிழ்’ தொடர்பிலான விடயத்தைக் கையாண்ட விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி ஏற்கெனவே விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், அந்தக் கட்சி எவ்வாறு தலையைக் கொடுத்து மாட்டிக் கொண்டது என்று பார்க்கலாம். ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பிலான அறிவிப்பு வெளியானதும், அதனைத் தமது தேர்தல் அரசியலின் ஆளுமைக்கு ஏற்பட்ட கௌரவ சவாலாக தமிழரசுக் கட்சி கருதியது. அதுதான், அந்தக் கட்சியின் தலைவர்களை தடுமாறவும் வைத்தது. ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழரசுக் கட்சி பங்கெடுக்குமா? என்கிற கேள்வி ஊடகங்களினால் முன்வைக்கப்பட்ட போது, அந்தக் கட்சியின் முக்கிஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் “இல்லை” என்றார். ஆனால், போராடுவதற்கான நியாயத்தை ஏற்றுக் கொண்டார். எனினும், ‘எழுக தமிழ்’ கௌரவ சவாலாக மாறிவிட்டதாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் சினமடைந்திருந்தனர்.

அப்படியான தருணமொன்றில், யாழ். வணிகர் சங்கத்தின் தலைவருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு ‘எழுக தமிழ்’ பேரணிக்கு யாழ். வணிகர் சங்கத்தின் ஆதரவினைக் கோரும் நோக்கில் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தருமான பேராசிரியர் சிற்றம்பலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ். வணிகர் சங்கத் தலைவரின் வீட்டில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், வணிகர் சங்கத் தலைவர் எழுக தமிழுக்குத் தமிழரசுக் கட்சியின் ஆதரவையும் கோருமாறும், சந்திப்புக்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் தமிழ் மக்கள் பேரவை முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, யாழ். வணிகர் சங்கத் தலைவர் வீட்டில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அங்கு இடம்பெற்ற பேச்சுக்களின் போக்கு ஒரு கட்டத்தில் ஏற்ற இறக்க நிலையை அடைந்தபோது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு அளிக்காது என்கிற பதிலை எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கின்றார். அப்போது, பேரவை முக்கியஸ்தர்களினால் ஆதரவு வழங்காவிட்டாலும் பரவாயில்லை “முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும்” என்கிற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அது, எம்.ஏ.சுமந்திரனை கோபப்படுத்திய போது, “எனக்கு உடன்பாடில்லாத விடயமொன்றுக்கு நான் முட்டுக்கட்டை போடுவேன்” என்கிற பதிலுரையோடு சந்திப்பு முடிந்து போயிருக்கின்றது.

இதனையடுத்து, தமிழரசுக் கட்சி எதிர் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கும் கட்சிகள் சில என்கிற அளவுக்கு விடயம் மேல் மட்டத்துக்கு வந்தது. ஆனாலும், ‘எழுக தமிழ்’ தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு அவசியமானது என்கிற உணர்நிலையில் மக்கள், பேரணிக்கு ஆதரவளித்திருக்கின்றார்கள். அது, தனிக்கட்சிகளின் அடையாளங்களில் நிகழ்த்தப்பட்ட வெற்றியல்ல. அது தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்கள் என்கிற பொது அடையாளத்தினூடாக நிகழ்ந்தது.

எழுக தமிழில் இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று தமிழ் மக்கள் பேரவையோ, அதற்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோ எதிர்பார்த்திருக்கவில்லை. பேரணியின் முடிவில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் போது, அதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டாலும், அவர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த உரையை வாசித்ததால் பெரிதாகத் தடுமாறியிருக்கவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியின் ஆளுமைக்கு முன்னால் தொடர்ந்தும் அடிபட்டு அல்லாடும் சுரேஷ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டுக் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக, சுரேஷ் பிரேமச்சந்திரன் ‘எள்ளெண்ணை எரிக்கக் கோரிய பத்திரிகை’யை சீண்டினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ கடந்த காலத்தில் தேர்தல் அரசியலில் சந்தித்த தோல்விகளின் ஆற்றாமையை சமூக ஊடகங்களில் தீர்த்துக் கொண்டார்.

‘எழுக தமிழ்’ வெற்றிச் செய்தி தமிழரசுக் கட்சியின் மேல் மட்ட ஆதரவுத் தளத்துக்கு பெரும் எரிச்சலாக மாறியது. அது, ஊடகவெளியில் பெரிய வியாக்கியானங்களைச் செய்ய வைத்திருக்கின்றது. இன்னொரு பக்கம் தொடர்ந்தும் அடிபட்டு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுத்தளமோ பெரு வெற்றிக்கான உரிமையைக் கோருமளவுக்கு நடத்து கொண்டிருக்கின்றது. இந்த உணர்ச்சி வசப்பட்ட நிலைகளைக் கடந்து நோக்கினால், எழுக தமிழில் கூடிய கூட்டம் அரசியல் உரிமைகளுக்கானது. மாறாக, ஒரு கட்சி அபிமானமோ, எதிர்ப்பு சார்ந்ததோ அல்ல. அதைப் புரிந்து கொண்டால், தமிழ்த் தேசிய அரசியல் கொஞ்சமாகவேனும் ஆரோக்கியமான பக்கத்திற்கு நகர முடியும்.

புருஜோத்மன் தங்கமயில்