சட்டத்திற்கு முரணாக இயங்கிய மதுபான சாலை மூடப்பட்டது-ரவிகரன்

227 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை இன்றுடன் நிரந்தரமாக மூடப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை இயங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் சார்பாளர்கள் தொடர்சியான எதிர்ப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு மூடப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் கருத்துத் தெரிவிக்கும்போது,

இந்த மதுபானசாலை, 2016.01.24 ஆம் திகதியன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டமையால், 21வயதிற்கும் குறைந்த இளையவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாகவும், பொது இடங்களுக்கு அருகாமையில் மதுபானசாலை அமைந்துள்ளதால், பலத்த இடர்பாடுகளுக்கும் தாம் முகங்கொடுப்பதாகவும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், பொது அமைப்புகளும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்நிலைமைகள் தொடர்பாக ஆராயும்போது, மதுபானசாலை அமைக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே, பதிவுசெய்யப்பட்ட கோவில்கள், கல்விநிலையங்கள், சிறுவர்பூங்கா போன்ற பொது இடங்கள் அமைந்திருந்தன. எனவே மதுவரிச்சட்டத்தின் 52ஆம் இலக்க எச்.எல் விதிகளை மீறும்வகையலேயே குறித்த மதுபானசாலை அமைந்திருந்தது.

ஆகவே குறித்த மதுபானசாலை முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானவகையிலேயே இயங்கிக்கொண்டிருந்தது.

உரியவர்களுக்கு இது தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தியதன் விளைவாக, 2016.02.03அன்று இரவு 07.00மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியரால், இம் மதுபானசாலை நிறுத்தப்பட்டதென வீட்டிற்கு சென்று கடிதம் தரப்பட்டது.

இந் நிலையில் 2016.02.05 ஆம் திகதி இரவு தடையை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இவற்றின் தொடர்ச்சியாக 31.01.2017 இடம்பெற்ற வடமாகாணசபையின் 83ஆவது அமர்வில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றும் என்னால் முன்மொழியப்பட்டது. இருந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமொன்றில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு, பிரதேச செயலரால் இம் மதுபானசாலை தொடர்பில் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளின்படி இம்மதுபானசாலை சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவே குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இது தொர்பாக கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலர் இ.பிரதாபன் இன்றையதினம் என்னோடு தொடர்புகொண்டு மதுபானசாலை மூடப்பட்டதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் சட்டத்திற்கு முரணான வகையில் இயங்கிய மதுபானசாலை அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் இடர்பாடுகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதையிட்டு மகிழ்டைகின்றேன் என்றார்.

Leave a comment