அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் – காமினி லொக்குகே

212 0

பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமர தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற குழு இன்றையதினத்துக்குள் கூடி எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய இருக்கின்றது. பாராளுமன்றத்தை கலைத்து மக்களுக்கு தேர்தலொன்றுக்கான சந்தர்ப்பத்தை வழங்கவே நாங்கள் முயற்சித்தோம். என்றாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் பாராளுமன்றத்தில் எங்களுக்கு 113 பெரும்பான்மை இல்லாவிட்டால் அடுத்த கட்டம் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்கு வருவோம்.

அத்துடன் பாராளுமன்றத்தில் எங்களுக்கு இதுவரை 113 பெரும்பான்மை இல்லை. அதனால் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டு எங்களால் கொண்டுசெல்ல முடியாது. அதனால் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்றவகையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் அணிக்கு அரசாங்கம் அமைக்க நாங்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றோம். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தேர்தலொன்றுக்கான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

Leave a comment