ரணில் விக்ரமசிங்கவுக்கும், .சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம்

245 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஒரு ஆவணப் பிரதியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்க்காட்சியாக அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளியாக செயற்பட்டு வருவதாகவும், அவர்களுடன் மறைமுகமாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையினாலுமே கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவான பிரேரணைக்கு சாதகமாக பாராளுமன்றில் வாக்களித்தனர் என குற்றம் சாட்டியிருந்தனர்.

எனினும் இவர்களின் குற்றச்சாட்டை மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கதின்  பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவித்தனர்.

இந் நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கான ஒரு ஆவண வடிவம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த அந்த ஆவணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து வடகிழக்கு மாகாணமாக மாற்றியமைப்பதாகவும், வடகிழக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை முற்றாக ஒழிப்பதாகவும், அப் பகுதிகளில் உள்ள புதிய விகாரைகளை நிர்மானிப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமும் சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டிருந்தது.

எனினும் இவ் ஒப்பந்தமான ஆவணமானது முற்றிலும் சிங்கள மொழியில் இருப்பதனால் தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் கையெழுத்திடுவதற்கான சாத்தியம் இல்லை.

ஆகவே இவ் ஒப்பந்தமானது ஒரு போலியானதாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம்.  தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில்  இருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்யை தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment