ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு வந்த சோதனை – பல மணி நேரங்கள் நீடித்த பரபரப்பு

251 0

ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்து வரும் சோதனைகளுக்கிடையே அதன் ஊழியர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் மற்றொரு சோதனை சிலிகான் வேலியை பரபரப்பில் ஆழ்த்தியது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் ஃபேஸ்புக் மென்லோ பார்க் அலுவலக ஊழியர்களை வெடிகுண்டு மிரட்டல் சில மணி நேரங்களுக்கு பீதியில் ஆழ்த்தியது.
சிலிகான் வேலியில் அமைந்திருக்கும் ஃபேஸ்புக் தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நியூ யார்க் காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் ஃபேஸ்புக் அலுவலகம் விரைந்த காவல் துறை அதிகாரிகள், அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரையும் வேகமாக வெளியேற்றினர்.
பின் வெடிகுண்டு நிபுணர்கள் குழு, வெடிமருந்துகளை கண்டறியும் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அலுவலகம் முழுக்க வெடிகுண்டுகளை தேடும் பணிகளில் நிபுணர்களுடன், மோப்ப நாய்கள் தீவிரமாக செயல்பட துவங்கிய நிலையில், வெளியே காத்திருந்த ஃபேஸ்புக் பணியாளர்களை பீதியில் ஆழ்த்தியது.
தீவிர சோதனைக்கு பின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பதை நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. மூன்றடுக்கு மாடிகளை கொண்ட ஃபேஸ்புக் அலுவலகம் முழுக்க நடைபெற்ற சோதனை முடிவு ஃபேஸ்புக் பணியாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யூடியூப் அலுவலகத்தை நோக்கி மர்ம பெண் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி இறுதியில் தானும் சுட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த மூன்று பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டது.

Leave a comment