ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

25 0

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது 20 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

மேலும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்தனர். அதனையும் மீறி வந்தால் சிறைபிடிப்போம் என கூறினர். பின்னர் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு விரட்டியடித்தனர்.

உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதால் படகு ஒன்றுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் எங்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். தற்போது மீண்டும் விரட்டியடித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றனர்.

Leave a comment

Your email address will not be published.