சென்னை – மதுரை அதிவேக ரெயில் அடுத்த வாரம் இயக்கம்- கட்டணம் ரூ. 1,140

278 0

சென்னை- மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது.

சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி. டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் ரெயில் உள்ளது.

ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் இருக்கிறது.

ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.

முதலாவதாக தேஜஸ் ரெயில் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. அந்த ரெயில் மும்பை- கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

2-வது தேஜஸ் ரெயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இது சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படுகிறது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில் மதுரைக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.

சென்னை- மதுரை இடையே தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

சராசரியாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தேஜஸ் ரெயில் சென்னை- மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும்.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்திலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்திலும் மதுரை செல்கின்றன.

தேஜஸ் ரெயிலில் சேர் கார் கட்டணம் ரூ.1,140-ல் இருந்து ரூ.1,200 வரைக்குள் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்பு ரெயில் பெட்டி கட்டணம் ரூ.2,135-ல் இருந்து ரூ.2,200 வரை இருக்கும். தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

விழுப்புரம், திருச்சி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a comment