பாராளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 2 ஆவது நாளாகவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யபபட்டுள்ள 13 மனுக்கள் மீதான தொடர்ச்சியான விசாரணை இன்றும் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணையின் போது, பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைப்பதற்கான அதிகாரம் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பனங்களை முன்வைத்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனு மீதான விசாரணையில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதிவாதிகள் தரப்பால் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் 2 ஆவது நாளாக 7 நீதியரசர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

