ஜெயலலிதா மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது சமாதிக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார். அதாவது ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவுக்கு 15 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மெரினா கடற்கரை அருகே எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அடிக்கல் நாட்டினர். இந்த பணிகள் ஒரு ஆண்டில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவுநாளையொட்டி அதிமுக சார்பில் ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தொண்டர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையொட்டி அங்கு ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

