ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

334 0

lasantha1நீதிமன்ற உத்தரவுக்கமைய ஏழு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் நிபுணத்துவ நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் இன்று காலை 8.30 அளவில் ஆரம்பமானது.

சம்பவம் தொடர்பான சகல அறிக்கைகளும் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக இந்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவிசாரணை திணைக்களம் கல்கிசை முதன்மை நீதவானிடம் தெரிவித்திருந்தது.

அரசாங்க பகுப்பாய்வாளர், குற்றவிசாரணை அதிகாரிகள் மற்றும் களுபோவில மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோரது அறிக்கைகளும் அவற்றுள்ள அடங்குகின்றன.

அவற்றுள் லசந்த விக்ரமதுங்கவுக்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையை தவிர வேறு எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது.

இதன்காரணமாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அடக்கம் செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் சிறப்பு நீதிமன்ற மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் ஊடாக மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் உடலம் தோண்டப்பட்டது.

இன்று காலை தொடக்கம் சடலம் தோண்டி எடுக்கப்படும் வரை பொரளை பொதுமயானம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காவற்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.