ஜெனீவாவில் ஈழத் தமிழர்களின் மாபெரும் பேரணி!

325 0

geneeva01ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்களுக்கு நீதி கோரி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் மாபெரும் பேரணி நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.

ஐநாவின் 33ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில், சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, பிரான்ஸ், பிரித்தானியா, நோர்வே போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி ஜெனீவா ஐ.நா முன்றல் வரை இடம்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு, தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதியை வலியுறுத்தினர்.

காணாமல்போனோர் அலுவலகம் என்ற பெயரில் காணாமல்போனோர் விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்படுவதாக குற்றம்சாட்டிய ஈழத் தமிழர்கள் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற பொறிமுறையாலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகம் நேரடியாக தலையீட்டு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததுடன், இனியும் காலம் கடத்தாது அதனை சர்வதேச சமூகம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தலைமை சட்ட ஆலோசகர் பரிந்துரைத்துள்ள நிலையில் நடைபெற்ற முதலாவது பேரணி இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இப்பேரணியில் கலந்து கொண்ட சிலர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தலைவர் இரா சம்மந்தன் மற்றும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்களின் புகைப்படங்களை அட்டையில் ஒட்டி அவற்றை இழுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஐ.நா. முன்றலில் தீயிட முயன்ற போது, சுவிஸ் நாட்டின் கடுமையான சட்ட நடைமுறைகளை புரிந்த தமிழ்க்காவல் தொண்டர்கள் தடுத்தமையால், அவற்றைத் தீயிடாமல் சிதைத்தெறிந்து காலால் மிதித்துச் சென்றனர்.