ரணில் – மஹிந்த சந்தித்து பேசிய இரகசியம்

8307 0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இரகசிய 20 நிமிட சந்திப்பு தொடர்பில் பல தரப்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இன்றைய   ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர் முற்பகல் 11.45 மணிக்கு இந்த சந்திப்பு பாராளுமன்ற முதலாம் மாடியிலுள்ள வாசிகசாலை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, எவரும் அவர்களுடன் இருக்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.

நாட்டில் அரசியல் பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த பதற்ற நிலைக்கு நேரடியாக தொடர்புபட்ட நபர்களாக இந்த இருவரும் காணப்படுகின்றனர். இந்த அரசியல் பதற்ற நிலைமையினால் இரு பிரதான கட்சிகளிலுமுள்ள ஆதரவாளர்கள் வன்முறைகளுக்கு தூண்டப்படுகின்றனர்.

கீழ் மட்ட ஆதரவாளர்கள் சத்தியாக்கிரக நடவடிக்கைகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பிலும் தங்களது தலைவர்கள் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கையில் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது இவ்வாறிருக்கையில், இரு பிரதான கட்சிகளினதும் தலைவர்கள் இந்த நெருக்கடியான காலப் பகுதியில் தனியாக சந்தித்துப் பேசிய விடயம்தான் என்ன? என்பதில் கீழ் மட்ட ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலைவர்களுக்காக தொண்டர்கள் பாதையில் இறங்கி, வெயில் – மழை பாராது கடுமையான பிரயத்தனம் எடுக்கையில், இரு தலைவர்களும் தனிமையாக சந்தித்துப் பேச வேண்டியுள்ள இரகசியம் என்னவிருக்கின்றது என்பது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.

Leave a comment