மனித புதைகுழி அகழ்வு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும்- சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

323 0

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நாளைக்  காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த மனித புதைகுழி தொடர்பான   வழக்கு விசாரணைகள்  நாளைய தினமே மன்னார்   நீதி மன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக அகழ்வு பணிகளை கண்காணிக்கும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலத்த மழை காரணமாகவும் , அரச பணிகாரணமாகவும்  மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இவ் அகழ்வு பணியை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகமும் இணைந்து செய்து கொண்டிருக்கின்றது.

அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்தவித பாதிப்புக்களும் இவ் அலுவலகத்தால் அகழ்வுப்பணிக்கு காணப்படவில்லை.

இவ் அகழ்வு பணி நாளைச் செவ்வாய்க்கிழமை 27 மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

குறித்த மனித புதை குழி தொடர்பான வழக்கு மன்னார்  நீதி மன்றத்தில் B232/18 கீழ் அழைக்கப்பட இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் ‘சதொச’ கட்டட வளாகத்தில் கடந்த   மார்ச் மாதம் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டிய போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்   கடந்த மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment