சபாநாயகர் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா? – எஸ்.பீ.

373 0

சபாநாயகரின் நடத்தையைப் பார்க்கும்போது அவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்த சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைக் கருத்திற் கொண்டே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு ஜனாதிபதி சென்றார்.

எனினும் தேர்தலை எதிர்கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஜே.வி.பியினரும் உச்சநீதி மன்றம் சென்று அதைத் தடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பம் மற்றும் இரத்தம் சிந்தும் நிலைக்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமரையும், அமைச்சரவையையும் ஏற்றுக் கொள்ளவில்லையென சபாநாயகர் கூறியுள்ளார். பிரதமரை நியமிப்பதோ அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவையை அகற்றும் அதிகாரமோ சபாநாயகருக்கு இல்லை.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென ஜனாதிபதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை சபாநாயகர் சபையில் அறிவிக்காது ஐ.தே.கவின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைய செயற்பட்டதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்ற குழுவறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment