அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்

261 0

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நீரிழிவு நோய் மைய கட்டிடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். 

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோய் மையத்துக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

பின்னர், நீரிழிவு நோயின் ஆபத்தை உணர்த்தும் வகையில் சர்க்கரையில் அக்கரை என்னும் தலைப்பின் கீழ் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 20 அணிகள் பங்கேற்ற சமையல் திருவிழா போட்டியும் நடைபெற்றது. இதில் கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட தானியங்களால் உருவாக்கப்பட்ட உணவு வகைகள் இடம்பெற்றன.

இதை பார்வையிட்ட அமைச்சர்கள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு மேலாண்மை கையேடு மற்றும் குளுக்கோமீட்டர் கருவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறியும் வகையில் அனைத்து துறைகள் அடங்கிய புதிய கட்டிடம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஷா எனப்படும் நடமாடும் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்படும் என கூறப்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் 108 ஆம்புலன்சுகள் அதிக அளவில் உள்ளன.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 770 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காலியாக உள்ள 1,884 டாக்டர்கள் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மாத இறுதிக்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி சந்தியா பேசுகையில், ‘எனக்கு கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. இந்த பாதிப்பு தான் டேக்குவாண்டோ எனும் தற்காப்பு கலை போட்டியில் உலகளவில் நான் வெள்ளி பதக்கம் பெற உதவியாக இருந்தது. அடுத்த போட்டிக்காக நான் ரஷியா செல்ல உள்ளேன். சர்க்கரை நோய்க்கு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

இந்த விழாவில், ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ், மற்றும் நீரிழிவு துறை டாக்டர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment